திருப்பதி கங்கையம்மன் கோயிலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்

திருமலை, மே 23: திருப்பதி கங்கையம்மன் கோயிலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை குப்பம் வந்தார். விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்தில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கணேசபுரத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் தளத்தில் தனது மனைவி புவனேஸ்வரியுடன் இறங்கினார்.

பின்னர் அங்கிருந்து குப்பம் தனியார் மருத்துவக்கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து 10.30 மணிக்கு திருப்பதி கங்கையம்மன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றுவிட்டு 11.30 மணிக்கு கணேசபுரத்தில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பெங்களூரு புறப்பட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருவிழாவில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: