கோயில் விழாவில் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

திருத்தணி, மே 21: திருத்தணியில் நேற்று முன்தினம் நடந்த திரவுபதி அம்மன் கோயில் தீமிதித்திருவிழாவில் திருவண்ணாமலையை சேர்ந்த தர் ரங்கராட்டினம் அமைத்திருந்தார். இதை காஞ்சிபுரத்தை சேர்ந்த கவாஸ்கர் (30) என்பவர் இயக்கினார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மூன்று மர்ம நபர்கள்,  கத்தியை காட்டி மிரட்டி கவாஸ்கரிடம் இருந்த ₹3,200 பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கவாஸ்கர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவுசெய்த போலீசார்,  முருகப்பா நகரைச் சேர்ந்த குரு (எ) சரவணன் (30), ஜோதி நகரைச் சேர்ந்த தியாகு (28) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வால்டர் (எ) வெங்கடாசலம் (27) ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், கத்தியை காட்டி மிரட்டி கவாஸ்கரிடம் இருந்து பணம் பறித்தது இவர்கள் தான் என தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: