மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்களில் எல்இடி விளக்குகள் பழுது

கோவை, மே 17: கோவை மாநகரில் பல இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகள் பழுதானதால் நிறங்கள் தெரிவதில்லை. இதனால் நிறங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகர போலீசார் சார்பில் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் உள்ள சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சிக்னல்களில் உள்ள வண்ணங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் அதிக திறன் கொண்ட எல்.இ.டி பல்புக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாநகரில் ஜி.எச், பாப்பநாயக்கன்பாளையம், பாலசுந்தரம் சாலை,வின்சென்ட் ரோடு சிக்னல், நவ இந்தியா சிக்னல், போன்ற பல இடங்களில் உள்ள சிக்னல்கள் போக்குவரத்து போலீசார் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்துக்களும் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் லங்கா கார்னர் சிக்னல், வின்சென்ட் ரோடு சிக்னல், நவ இந்தியா சிக்னல் போன்ற சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி பல்புகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் சிக்னல்களில் எரியும் வண்ணங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிக்னல்களை புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: