புழல் 22வது வார்டில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: ஏலம் விட மக்கள் கோரிக்கை

புழல்: புழல் 22வது வார்டு காந்தி பிரதான சாலையில் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் அடிப்பகுதியில் புழல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனங்களை சுற்றிலும் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு  விஷப்பூச்சிகள் ஊடுருவி வருகின்றன. மேலும், குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் அதிகளவு குப்பைகள் தேங்கி உள்ளதால், அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுகள் கலந்து, பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் துருப்பிடித்த வாகனங்கள் மற்றும் குப்பைக்கழிவுகளை அகற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே துருப்பிடித்து வீணாகும் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்களை ஏலத்தில் விடவும், தேங்கி கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: