வாக்கு எண்ணும் மையத்தில் காலை 8 மணிக்குள் தபால் ஓட்டு

வாக்கும் எண்ணும் மே 23ம் தேதியன்று காலை 8 மணிக்குள் தபால்  வாக்குகளை மையத்தில் ஒப்படைக்கும்படி அஞ்சல் துறைக்கு தேர்தல் அதிகாரிகள்  கடிதம் அனுப்பியுள்ளனர்.  தமிழகத்தில் 38 மக்களவை தேர்தல், 18  சட்டசபைக்கான இடைத்தேர்தல் ஏப்.18ல் நடந்தது. தொடர்ந்து திருப்பரங்குன்றம்  உள்ளிட்ட 4 சட்டசபைக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ல் நடக்கவுள்ளது. இதற்கான  வாக்கு எண்ணிக்கை மே 23ல் நடக்கிறது. அதேநேரம் தேர்தல் பணியில் அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட்டனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்கு வசதியாக தபால் ஓட்டுச்சீட்டுகள்  வழங்கப்பட்டன. மேலும் தபால் ஓட்டுக்களை செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பாகவே பலரும் தபால் ஓட்டுக்களை செலுத்தி  விட்டனர். ஒரு சிலர் தங்கள் தபால் ஓட்டுக்களை தேர்தலுக்கு பின்பு தபாலில்  அனுப்பி வருகின்றனர். அதேபோல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  கொண்டு இருக்கும் ராணுவவீரர்களுக்கு ஆன்லைனில் தபால் ஓட்டுச்சீட்டுக்கள்  அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஓட்டுச்சீட்டுக்களை பதிவிறக்கம்  செய்து, விரும்பிய சின்னத்தில் முத்திரையிட்டு தபாலில் அனுப்பி  வருகின்றனர். தபால் ஓட்டுகளை பொறுத்தவரை, வாக்கு எண்ணும் நாளான வரும் மே  23ம் தேதி காலை 8 மணிக்குள் மையத்திற்கு வந்து சேர்ந்து விட வேண்டும்.  அதன்பின்பு வரும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கைக்கு எடுத்து  கொள்ளப்படாது.  எனவே அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள்  அஞ்சல்துறைக்கு கடிதங்கள்  அனுப்பியுள்ளனர். அதில் தபாலில் வரும் தபால் ஓட்டுகளை 23ம் தேதி காலை 8  மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்தில் சேர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.  

ஓட்டு இயந்திரங்களில்  மாதிரி வாக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் மொத்தம் 297 வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம்,  தாசில்தார் நாகராஜன், துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் ஆகியேர் உடன் இருந்தனர். வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்யவிடாமல் போலீசார் தடுப்பதாக கூறி 15 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர்.  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நேதாஜி முற்போக்கு கட்சியை சேர்ந்த பூவநாதன் சுயேட்சை வேட்பாளராக படகோட்டி உடன் பாய்மரப்படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தொகுதிக்கு உட்பட்ட பசுமலையில் உள்ள முக்கிய வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுள்ளார். அந்த தெருவில் அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா வீடும் உள்ளது. அவரது வீட்டிலும் நோட்டீஸ் கொடுத்தனர். அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, போலீஸ் எஸ்ஐ சேகர் மற்றும் சில போலீசார் திடீரென்று வந்து, பிரச்சாரம் செய்யக் கூடாது; அனைவரும் உடனே செல்லுங்கள் என கூறி வேட்பாளரிடம் இருந்த நோட்டீசை பறித்து, கழிப்பறையில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை வேட்பாளர் எதிர்த்த போது, அவர்கள் மிரட்டி வலுக்கட்டாயமாக பிரச்சாரம் செய்ய கூடாது என விரட்டியதாக தெரிகிறது.

 இதையடுத்து பூவநாதன் மற்றும் 15 சுயேட்சை வேட்பாளர்கள் திரண்டு மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் இல்லாததால், தேர்தல் பிரிவு தாசில்தார் உதயசங்கரிடம் புகார் மனு கொடுத்தனர்.  இது குறித்து சுயேட்சை வேட்பாளர் பூவநாதன் கூறும்போது, ‘‘திருப்பரங்குன்றம் தொகுதியில், சுயேட்சைகளை பிரச்சாரம் செய்யவிடாமல் போலீசார் திட்டமிட்டு தடுக்கின்றனர்.  அரசியல் கட்சியினர் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? எங்களது பிரச்சாரத்தை தடுத்த எஸ்ஐ சேகர், ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம்’’ என்றார்.     

Related Stories: