உத்தமபாளையம் அருகே போர்வெல் கம்பெனியில் 6 கொத்தடிமைகள் மீட்பு சாப்பாடு, சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியதாக புகார்

உத்தமபாளையம், மே 10: உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் கொத்தடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியதாக 6 மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களை சப்-கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுர் மீட்டது.

மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டம், முரண்டா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்(35), மனோரி(35), இவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள். தனியார் ஏஜென்ஸிகள் மூலமாக தேனி மாவட்டத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் இதே மாநிலங்களை சேர்ந்த ரோசன்(18), சூரஜ்(18), மனோஜ்(18), ராம்விகாஷ் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 6 பேர் வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 8 மாதமாக தங்கி வேலை பார்த்த இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டுள்ளது. ஆனால் போர்வெல் கம்பெனியை சேர்ந்தவர்கள் பேசியபடி சம்பளம் தராமல் இழுத்தடித்துள்ளனர். சாப்பாடு ஒருவேளை மட்டுமே அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடன் வேலை பார்த்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேரும் தங்களது நிலைமையை தங்களது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயனிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த தகவல் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்.பி.பாஸ்கரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனிடம், கொத்தடிமையாக உள்ள 6 பேரையும் மீட்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2 நாட்களாக வைத்திநாதன் தலைமையில் தனி குழு அமைத்து தேடி வந்துள்ளனர். நேற்று க.புதுப்பட்டி - கம்பம் செல்லும் மாநிலநெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பல்க் அருகே இருந்த 6 பேரையும் மீட்டனர். அனைவரையும், உத்தமபாளையம் சப் -கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட தினேஷ் கூறுகையில், `` எங்களை தனியார்கள் மூலமாக கடந்த 8 மாதத்திற்கு முன்பு கம்பத்தில் போர்வெல் கம்பெனி லாரியில் பணியமர்த்தினர். சொன்னபடி சம்பளம் தரவில்லை. 8 மாதமாக எங்களில் யாரையும் வெளியே விடவில்லை. குடும்பத்தினர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளனர். இவர்களுடன் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.

வேலை இல்லாத நேரங்களில் எங்களை எங்கும் செல்ல அனுமதிக்காமல் சம்பந்தப்பட்ட போர்வெல் கம்பெனிக்காரர்கள் மிரட்டுவார்கள். இதனால் நாங்கள் பயத்துடன் வேலை செய்தோம். சாப்பாடு கூட சரியாக தராமல் இழுத்தடித்தனர்’’ என்றார். இதுகுறித்து சப் -கலெக்டர் கூறுகையில், மீட்கப்பட்ட 6 பேரை போலீஸ் பாதுகாப்புடன் மத்திய பிரதேசத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையில் உடனடியாக தலா ரூ.20ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைவரையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் சேர்க்கவும், புகார் தந்த பெத்துல் மாவட்ட எஸ்.பி.முன்னிலையில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார். இவர்கள் இன்று(10ந்தேதி), சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

Related Stories: