உத்தமபாளையம் முல்லையாற்றில் பராமரிப்பு பணி எப்போது?

உத்தமபாளையம், மே 9: உத்தமபாளையம் முல்லையாற்றில் தண்ணீர்செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ளாததால் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் கோடைக்காலம் என்பதால் கிடு கிடு என சரிந்து வருகிறது. இதனால் இனி மழை பெய்து பெரியாறு அணை உயர்ந்தால் மட்டுமே இரண்டு போக நெல்சாகுபடி செய்ய முடியும். முல்லைபெரியாறு ஆற்றுப்படுகை கூடலூரில் தொடங்கி வைகை அணை வரை நீண்டு செல்கிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் 100 கனஅடி தண்ணீர் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் எந்தஇடத்திலும் தேங்காமல் இருப்பதற்காக கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை முன்பெல்லாம் மராமத்து பணிகள் நடக்கும். குறிப்பாக உத்தமபாளையம், சுருளிப்பட்டி, சீலையம்பட்டி, மார்க்கயன்கோட்டை, வீரபாண்டி என ஆற்றுப்படுகையின் இரண்டுபுறமும் உள்ள செடிகள், இடையூறான புதர்மேடுகள் அகற்றப்படும். மிக மோசமாக உள்ள பள்ளங்களில் பராமரிப்பு பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. இப்போதோ எந்த வேலையும் செய்வதில்லை. இதனால் ஆற்றுக்குள் சகதி, செடி கொடிகள் அதிகரித்துள்ளன. பள்ளங்களில் சகதிகள் தேங்கி கிடப்பதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குளிக்க சென்றவர்கள். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிக மோசமான நிலையில் உள்ள ஆற்றுப்பள்ளங்களை சீரமைக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், ஆற்றுப்படுகையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படவேண்டும். குறிப்பாக ஆற்று ஓரங்களில் செடிகள், பள்ளமான இடங்களில் சேறும், சகதியுமாக உள்ள இடங்களை கண்காணித்து அதனை அப்புறப்படுத்திட தேவையான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் களம் இறங்கவேண்டும். இல்லையென்றால் உயிர்ப்பலி தொடர்வதை தடுக்க முடியாது என்றனர்.

Related Stories: