எட்டு நாட்கள் களைகட்டிய வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவடைந்தது

தேனி, மே 15: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின்போது, தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வர்.

அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதைதொடர்ந்து நேர்த்திக்கடன்களாக ஆயிரம்கண்பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், முடிகாணிக்கை செலுத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல், சேருபூசிக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா கடந்த மாதம் 17ம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து மே 7ம்தேதி முதல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. திருவிழாவின் முதல் இரண்டு நாட்கள் அம்மன் அலங்கரிக்கப்பட்டு முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருத் தேரோட்டம் நடந்தது. அன்றைய தினம் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தை தொடர்ந்து முதல் நாள் கிழக்கு வீதியிலும், 2ம் நாள் தெற்கு வீதியிலும், 3ம் நாளான நேற்று முன்தினம் மேற்கு வீதியில் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதனையடுத்து, வீரபாண்டி பேரூராட்சி அருகே பேரூராட்சி அலுவலகம் சார்பில் மண்டகப்படி நடந்தது. இதில் பேரூராட்சி சேர்மன் கீதாசசி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சித்திரைத் திருவிழாவில் சிறப்பாக சுகாதாரப்பணிகளை மேற்கொண்ட தூய்மைப்பணியாளர்களை பேரூராட்சித் தலைவர் கீதாசசி கவுரவித்தார்.

இந்நிலையில், பேரூராட்சி மண்டகப்படி மற்றும் போலீசாரின் மண்டகப்படியை அடுத்து,தேர் வடக்கு வீதிவழியாக நேற்றுமுன்தினம் இரவு நிலைக்கு வந்தடைந்தது. இதனையடுத்து, தேரில் இருந்த அம்மன் உற்சவர் தேரில் இருந்து இறங்கி தேரோட்டம் நடந்த வீதிகளில் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, அம்மன் உற்சவர் கோயிலுக்குள் சென்றது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடப்பட்ட கம்பம் பூஜை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து, நேற்று காலை கோயில் வளாகத்தில் ஊர்பொங்கல் விழா நடந்தது. இதில் பரம்பரை முறைதாரர்கள் மற்றும் வீரபாண்டி கிராமத்தினர் கோயில் முன்பாகவும், வீரபாண்டி கிராமத்திலும் ஊர்பொங்கல் படைத்தனர்.

சித்திரைத் திருவிழாவின் இறுதிநாளான நேற்று காலை முதல் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். மேலும், ஏராளமான பக்தர்கள் கம்பம் நடப்பட்டிருந்த இடத்திற்கு முல்லையாற்றில் இருந்து எடுத்து வந்த நீரை ஊற்றினர். இதனையடுத்து, நேற்று (14ம்தேதி) நள்ளிரவு 12மணிக்கு திருவிழா நிறைவடைந்தது. சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் கோயிலில் அம்மன் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம் நடத்தப்பட்டு, மஞ்சள்நீர் தெளித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனையடுத்து, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவங்கிய கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவுடன் சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மேலும், இத்திருவிழாவிற்காக தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் பேருந்துகள் மற்றும் சின்னமனூரில் இருந்து தேனி வரும் பேருந்துகளின் வழித்தடங்கள் கடந்த எட்டு நாட்களாக வழித்தடம் மாற்றி இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பேருந்துகள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post எட்டு நாட்கள் களைகட்டிய வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: