சீர்காழி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை புரிந்தோருக்கு பாராட்டு

சீர்காழி, மே 9: சீர்காழி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாராட்டு தெரிவித்தார். சீர்காழி அருகே காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வீரமணி மனைவி சாந்தி (50) இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பில் அடிபட்டு ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக கடும் வலியால் அவதிப்பட்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

பல்வேறு இடங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை. இந்த நிலையில் சாந்தி கடும் வலியால் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது அவரை பரிசோதித்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் அறிவழகன் தலைமையில் டாக்டர்கள் அருண்ராஜ் குமார் மகேஷ் ஆகியோர் சாந்திக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி, பின்னர் அரசு மருத்துமனையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெற்று வந்த இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை சீர்காழி அரசு மருத்துமனையில் முதன்முதலில்  செய்து சாதனை படைத்த டாக்டர்கள் அறிவழகன், அருண்ராஜ்குமார், மருதவாணன், மகேஷ்,   நாகை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக  வந்து பாராட்டினர். பின்பு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சாந்தியிடம் நலம் விசாரித்தார்.

Related Stories: