அடிப்படை வசதியற்ற தாந்தோணிமலை வணிக வளாகம்

கரூர், மே 9: கரூர் தாந்தோணிமலையில் உள்ள வணிக வளாகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் மாவட்ட வணிக வளாகம் உள்ளது. சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை வளாகமாக இந்த வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ. 28லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.தரைத்தளத்தில், சுய உதவிக் குழுக்களின் அலுவலகமும், மாற்றுத்திறனாளிகள் சிலரின் கடையும் உள்ளன. மாவட்ட வணிக வளாகத்துக்கு போதுமான விளம்பரம் இல்லாத காரணத்தினால், தரைத்தளத்தை தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலியாகவே உள்ளது.

ஆனால், இந்த தளத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. கழிப்பறை இருந்தும் சுத்தமாக தண்ணீர் வசதி இல்லை. இதனால், கடைகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும் மகளிர்கள் அனைவரும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால், அனைத்து பிரச்னைகளுக்கும் வீட்டுக்கு சென்று வர வேண்டிய நிலை நிலவி வருகிறது.

இந்த வளாகத்தை புதுப்பித்து, தண்ணீர் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும், அனைத்து அறைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , மாவட்ட வணிக வளாகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, வணிக வளாக செயல்பாடு குறித்தும் அனைவருக்கும் தெரியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: