மாநகரில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், மே 7: திருப்பூரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. திருப்பூரில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ய துவங்கியது. 6 மணி வரை நீடித்த மழையால், பிச்சம்பாளையம் புதூர், புது பஸ்நிலையம், புஷ்பா தியேட்டர், காந்தி நகர், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் அப்பகுதியினை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அதேபோல், காலேஜ் ரோட்டில் உள்ள ராயபுரம் மற்றும் அணைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பாலத்தை கடந்து செல்ல முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

திருப்பூர் மாநகராட்சியின் சில பகுதிகளில் குடியிருப்பு பகுதியினுள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த மழை காரணமாக திருப்பூரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும், வலையங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வலையங்காடு ரோட்டில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நின்றிருந்த கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: