திருவாரூர் ராமகே ரோட்டில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் துர்நாற்றம்

திருவாரூர், மே 3: திருவாரூர் நகராட்சி ராமகே ரோட்டில் பல நாட்களாக சாலையில் வழிந்தோடும்  பாதாள சாக்கடை கழிவுநீர் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.50 கோடி மதிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்  நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டப்பணி உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும்  பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உரிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியினை தற்போது பராமரிப்பதற்கு நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட  செலவு செய்யாமல் அந்த நிறுவனத்தினர் பெருமளவு தொகையினை சுருட்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கென நகரின் பல்வேறு இடங்களில் கழிவு நீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் மின்மோட்டார்கள் அமைத்து கொடுக்கப்பட்ட போதிலும் தனியார் நிறுவனம் அதனை கூட சரிவர பராமரிக்காமல் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலையே இருந்து வருகிறது. அதன்படி நகராட்சி 9வது வார்டு ராமகே ரோட்டில் உள்ள நகராட்சியின் துவக்கப்பள்ளி அருகே இதுபோன்று கழிவுநீர் கடந்த பல தினங்களாக வழிந்தோடுவதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே இதனை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: