வறட்சி நிலவுவதால் மழை பெய்ய வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு

பெரம்பலூர், மே 3:  இந்து சமய அறநிலையத்துறையின் தமிழக முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:  2019-20ம் ஆண்டு ஸ்ரீநல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய கோயில்களில் அந்தந்த கோயில்களின் பழக்கவழக்கத்துக்கு உட்பட்டு நடத்திட அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்ளப் படுகிறது.

இதன்படி பர்ஜன்ய சாந்தி வருணஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், நந்திபெருமானுக்கு நீர் தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை (மழை வேண்டுதல் பதிகம்) ஓதுதல் வேண்டும்.

திருஞான சம்பந்தர் இயற்றிய முதலாம் திருமறையில் தேவார மழை பதிகத்தை மேகராக குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி, ரூப கல்யாணி, போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர்விழ செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகாவிஷ்ணுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அந்தந்த கோயில்களின் பழக்கவழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்த அக்கறையுடன் இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சார்நிலை அலுவலர்களை கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் இந்து சமய அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் உடனிருந்து சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடத்த கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: