ஆரணி அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு கல்லூரி பஸ்களை சிறைபிடித்து மறியல் போலீசாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளு

ஆரணி, ஏப்.26: ஆரணி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கல்லூரி பஸ்களை சிறைபிடித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மாமண்டூர் ஊராட்சி மற்றும் அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 8 மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் மற்றும் பிடிஓவிடம் பொதுமக்கள் முறையிட்டனர். தொடர்ந்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாமண்டூர் மற்றும் அம்பேத்கர் நகரில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால், அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 6.30 மணியளவில், ஆரணி- செய்யாறு சாலையில் அதே கிராமத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, மகளிர் இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறை பிடித்தனர். பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து 2 அரசு பஸ்களை விடுவித்தனர். மேலும் அப்போத வந்த தனியார் கல்லூரி பஸ்களை சிறை பிடித்து விட மறுத்தனர். தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பிடிஓவிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் காலை 9.45 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் பிடிஓ குப்புசாமி வந்து போலீசாரிடம் பேசி விட்டு சென்றார்.

இதேபோல், மாமண்டூர் கிராம மக்களும் தங்களுக்கு சரியாக குடிநீர் வினியோகிக்க வில்லை என கூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.உங்கள் கோபத்தை தேர்தலில் காட்டுங்கள் - டிஎஸ்பி ஆவேசம்முன்னதாக, டிஎஸ்பி செந்தில் சமரசம் பேசியும் பொதுமக்கள் மறியலை சிறிதுநேரம் கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், தேர்வுக்கு செல்லும் கல்லூரி மாணவர்களையும் செல்லவிடாமல் பஸ்சை வழிமறித்து மறியலில் ஈடுபடுவது நியாயம் இல்லை. உங்களது கோபத்தை தேர்தலில் வாக்களிக்கும் போதுதான் காண்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என எச்சரித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: