உசிலம்பட்டியில் பயங்கரம் நான்கு வழிச்சாலையில் நடந்த மறியலில் தடியடி

மேலூர், ஏப். 25: ஒரு சமூகத்து பெண்களை இழிவு படுத்தி பேசி வீடியோ வெளியிட்ட உண்மையான நபர்களை கைது செய்ய கோரி மேலூர் நான்கு வழிச்சாலையில் நான்காம் நாளாக நடைபெற்ற சாலை மறியலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஒரு சமூகத்து பெண்களை இழிவு டுத்தி பேசி சில தினங்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் வீடியோவை வெளியிட்டனர். இது வாட்ஸ் அப் மூலம் வைரலாக பரவியது. இதனை கண்டித்தும், மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி  கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் ரோடு மறியல், போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வீடியோ சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறி சிலரை கைது செய்தனர். உண்மையான நபர்களை விட்டு விட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த சமூகத்தினர் குற்றம் சாட்டினர். ஏற்கனவே 3 நாட்கள் கொட்டாம்பட்டி பகுதியில் நடைபெற்று வந்த ரோடு மறியல் நேற்று மேலூர் பகுதிக்கு மாறியது. மதுரையில் இருந்து மேலூருக்கு பிரியும் இடத்தில் நான்கு வழிச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்க துவங்கியது. மேலூர் டிஎஸ்பி சுபாஸ் மற்றும் தாசில்தார் சிவகாமிநாதன் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால். அவர்கள் மறியலை கைவிட  மறுத்தனர். இதனால் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற போலீசார் முயன்றனர். இதனால் போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் மறியலில் ஈடுபட்டவர்கள் வீச துவங்கினர். இதனால் போலீசார் மறியல்காரர்கள் மீது தடியடி நடத்த, போராட்டக்காரர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். போலீசார் மீது கற்களை வீசியதில் மேலூர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் தலைமை காவலர் தர்மலிங்கத்தின் வலது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. இவர் மேலூர் ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 3 ஆயுதப்படை போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மறியலால் சுமார் 1 மணி நேரம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: