‘அடிப்படைகள்’ அமைத்து புல்லாவெளி சுற்றுலா தலமாக்கப்படுமா?

பட்டிவீரன்பட்டி, ஏப். 25: அடிப்படை வசதிகள் அமைத்து புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் மழையின் காரணமாக பல இடங்களில் ஊற்று தண்ணீர் சிறுஅருவியாக விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் குடகனாற்றில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து புல்லாவெளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர்தான் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கும் செல்கிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதால் இந்த அருவி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இப்பகுதியில் சாம்பல் நிற அணில், மான், காட்டுமாடு, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

சித்தரேவு மலையடிவாரத்தில் இருந்து இந்த அருவி 13 கிமீ தூரத்தில் உள்ளது. பெரும்பாறை- தாண்டிக்குடி மலைரோட்டில் உள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது. இங்கு செல்ல பாதை வசதி கிடையாது. கற்களால் ஆன குறுகலான பாதை உள்ளது. அதுவும் குண்டும், குழியுமாக தான் காட்சியளிக்கிறது. நீண்டதூரம் ஆறாக பயணித்து இங்கு தண்ணீர் பாய்வதால் அருவி விழும் பகுதி சுமார் 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இங்கு குளிப்பதற்காக சென்று இதுவரை 5க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மது அருந்தி குளிப்பதும், செல்போன்களில் செல்பி எடுப்பதுமே இந்த பலி சம்பவங்களுக்கு காரணம். மேலும் மதுபிரியர்கள் போதை தலைக்கேறியதும் பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குடகனாறு அகலமாக தண்ணீர் செல்லும் ஆறாகும்.

இந்த ஆற்றை கடக்க ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தொங்கு பாலம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனை சீரமைத்து ஆற்றில் படகு சவாரி செய்வதற்கு ஏற்பாடு செய்வதால் இப்பகுதி வாசிகள் பயனடைவதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புல்லாவெளி நீர்வீழ்ச்சி செல்வதற்கு சாலை, குடிநீர், கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை வசதிகள் ஏற்படுத்தி தந்து சுற்றுலா தலமாக்க வேண்டும். இங்கு மதுபிரியர்கள் போடும் கும்மாளத்தை தடுக்க அடிவாரத்தில் வனத்துறை செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். குடகனாறு ஆற்றில் படகுசவாரி செய்ய சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: