கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது

விருத்தாசலம், ஏப். 24: உழவர் மன்ற கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்  மத்திய அரசு சுமார் 35 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த  மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு  அனுமதி வழங்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மொத்த  இடத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்கள் கடலூர் மாவட்டத்தில்  செயல்படுத்த உள்ளதாகவும்,  அதற்கான ஆய்வினை மேற்கொண்டு அத்திட்டத்தை  செயல்படுத்த தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது. இந்த திட்டம் முழுமையாக  செயல்படுத்தப்பட்டால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும்  அபாயம் உள்ளது.ஏற்கனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் காரணமாக  மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஆகிய ஒன்றியங்களில் குடிநீருக்காக அலையும்  அவலம் உள்ளது. ஊராட்சி  மன்றங்களின் மூலம் செயல்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் சுமார் 1500 அடி  கீழே சென்று ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்மூலமே குடிநீர் கிடைக்கும் நிலை  இருந்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமும் செயல்படுத்தினால் ஒட்டுமொத்த  கடலூர் மாவட்ட விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, கடலூர் மாவட்டத்தில்  இத்திட்டத்தை செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: