வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு

பெரம்பலூர், ஏப்.24: வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 1644 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி தரைதளத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், முதல் தளத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2ம் தளத்தில் முசிறி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி தரைதளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், முதல்தளத்தில் துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2ம் தளத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதில் 3 சிப்டுகளில் காவலர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு அத்துமீறி யாரும் உள்ளே நுழைவதை தடுக்கவும், வெப் கேமராக்கள் வசதியுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் உள்ளே வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் தங்களது பெயர் மற்றும் பதவி, உள்ளே செல்லும் நேரம் ஆகியவற்றை வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள அனைத்து அலுவலர்களும் இந்த தேர்தல் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து தான் பணிபுரிய வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் தனித்தனியாக உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் ஒரே நேரத்தில் பார்வையிட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே குழுவாக செல்ல அனுமதிக்கப்படும். அவ்வாறு அனுமதிக்கப்படும் நேரத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் உடனிருக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து வேட்பாளர்களது முகவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையை பார்வையிட்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்டிஓ விஸ்வநாதன், டிஎஸ்பி தேவராஜ், தாசில்தார் சித்ரா உடனிருந்தனர்.

Related Stories: