கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிழற்குடை இல்லாத பஸ்நிறுத்தம்:

கும்மிடிப்பூண்டி, ஏப்.23: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்காததை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.  கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆரம்பாக்கம், செதில்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபுத்தூர்,  சுண்ணாம்புகுளம், மேலக்கழனி, புதுவாயில், அயநெல்லூர், எளாவூர், மங்காவரம், மங்கலம், எருக்குவாய், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையங்களில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை இணைப்பு, வாக்காளர் அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்துசெல்கின்றனர்.

அப்படி வருகின்ற பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் கால்கடுக்க நிற்கின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால்  வெயிலில் காய்ந்தும், மழைக்காலத்தில் நனைந்தும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு  அந்த நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுமீது இதுநாள்வரை நடவடிக்கை இல்லை.

மேலும் ஓரிரு நாட்களில் இந்தப் பேருந்து நிறுத் நிழற்குடை அமைக்க வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: