தாமிரபரணி கரையோரம் ஆக்கிரமிப்பு நெல்லை கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஏப். 23: நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

நெல்லை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பாபநாசம் துவங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் சுமார் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த 128 கிமீ தூரம் வரை இன்னும் பல மண்டபங்கள், அபார்ட்மெண்டுகள் உட்பட பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளவர்கள் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் விடுவதால் ஆற்று நீரும் மாசுபட்டு வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நெல்லை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: