சிறுமலை எலுமிச்சை கிலோ ரூ.150 வரத்து குறைவால் விலை எகிறியது

திண்டுக்கல், ஏப்.22: சிறுமலையில் எலுமிச்சம் விளைச்சல் பாதித்து வரத்து குறைந்ததால் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் விளையும் எலுமிச்சை சிறப்பு பெற்றதாகும். சிறுமலையில் எலுமிச்சை இயற்கையாக விளையக்கூடியது. இதற்கு உரம் எதுவும் இடுவதில்லை. இதனால் சிறுமலை எலுமிச்சம் பழத்தை மக்கள் விரும்பி வாங்குவர். மேலும் சிறுமலையில் இருந்து திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், திட்டக்குடி உட்பட பல வெளிமாவட்டங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 மாதமாக மழை இல்லாததால் சிறுமலை எலுமிச்சம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் இயற்கை மழை இல்லாததால், புள்ளி நோய்களும் தாக்கியுள்ளன. இதனால் பல இடங்களில் மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

எலுமிச்சம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு எலுமிச்சம்பழம் ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலையால் வியாபாரிகள் வருத்தமடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சிறுமலை விவசாயி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சம் பழங்கள் மழை இல்லாததால் வெம்பியுள்ளன. எப்போதும் கோடை காலத்தில் பெய்யும் மழையும் தற்போது இல்லாததால் மக்கள் குடிநீருக்கே அவதிப்படுகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. எலுமிச்சம் பழம் கோடை வெயிலுக்கு ஏற்றதாகும். வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. சிட்ரிக் அமிலம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடியது. இந்த பழம் வரத்து குறைவால் எலுமிச்சம் விலை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தாண்டாவது மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார்.

Related Stories: