பொட்டல்புதூர் சாலை சீரமைப்பு

கடையம், ஏப். 22:  கடையம் அருகே பொட்டல்புதூர் முத்தன் தெருவில் உருக்குலைந்த சாலை தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  கடையம் ஊராட்சி ஒன்றியம், பொட்டல்புதூர் ஊராட்சியில் முத்தன் தெரு உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி சாலை முக்கூடல் சாலையும் அம்பை சாலையும் இணைக்கும் பகுதியாகும். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக  மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் சிதலமடைந்து கிடந்தது. தொடர்ந்து மக்கள் அளித்த புகாரை அடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த சாலையை தோண்டி சாலை அமைக்கும் பணி  துவங்கியது. பின்னர் இந்த சாலையில் ஜல்லி கற்கள் அமைத்து மண் நிரப்பப்பட்ட போதும் திடீரென சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக இதில் தார் அமைக்காததால் சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி பரவிக் கிடந்தன. இவ்வாறு உருக்குலைந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகினர். தொடர்ந்து சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளம் விழுந்தன.  இதனால் சாலையில் அப்பகுதி மக்கள் நடக்க முடியாத அளவிற்கு சிரமபட்டனர். இதுகுறித்த செய்தி  தினகரனில் கடந்த மாதம் 5ம் தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணிகள் மீண்டும் துவங்கி தார் சாலை முற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: