திருத்தணி - திருப்பதி தடத்தில் கூடுதல் பஸ் இயக்காததால் பயணிகள் சாலை மறியல்

திருவள்ளூர், ஏப். 19: ஓட்டு போடுவதற்காக ஊருக்கு செல்ல திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் குவிந்தனர். எனினும் கூடுதல் பஸ்களை இயக்காததால் பாதிக்கப்பட்ட பயணிகள் திடீரென நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருத்தணிக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் வெளியூர் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வது வழக்கம். குறிப்பாக, நேற்று வாக்கு பதிவு என்பதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல திருவள்ளூர் ரயில் நிலையம் வரை புறநகர் மின்சார ரயில்களில் வந்திறங்கினர்.அரக்கோணம் அருகே பணிகள் நடைபெறுவதால் அனைத்து ரயில்களும் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்குவதால், பயணிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி தங்களது பகுதிகளுக்கு செல்ல திருவள்ளூர் தாலுக்கா அலுவலக பஸ் நிறுத்தம் வந்து குவிந்தனர்.

ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி, திருப்பதி செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும் மாற்று வழித்தடங்களில் சிறப்பு பேரூந்துகளாக இயக்கப்பட்டது.இதனால், பயணிகள் கூட்டம் அதிகரித்தது. திருத்தணி, திருப்பதி வழித்தடத்தில் பேருந்துகளை அதிகாரிகள் இயக்காததால், ஓட்டு போட தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.அவர்கள் திருவள்ளூர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லாததால், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஜெ.என்.சாலைக்கு ஆத்திரத்துடன் வந்து பயணிகள் திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், தாலுகா இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பஸ்கள் இயக்குவதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து  மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும், நேற்று அதிகாலை  2 மணிக்குத்தான் பேருந்துகள் இயக்கப்பட்டு, தங்கள் ஊர்களுக்குக் கிளம்பிச் சென்றனர்.

Related Stories: