விருதுநகர், ஏப். 18: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்க உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளன.பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று (ஏப்.18) நடைபெற உள்ளன. விருதுநகர் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1673 வாக்குச்சாவடிகளில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 093 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 56 ஆயிரத்து 377 பெண் வாக்காளர்கள், 130 திருநங்கைகள், மொத்தம் 14 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேர் வாக்களிக்க உள்ளனர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கடந்த காலங்களில் விருதுநகர் வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.1673 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன. அத்துடன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவில் 283 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை வைப்பதற்கான அறைகள் பலத்து பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்கள் துணை ராணுவப்படை வீரர்களின் கட்டுப்பாட்டில் இன்று இரவு முதல் ஒப்படைக்கப்பட உள்ளது.