திருமங்கலத்தில் மீனாட்சி-சொக்கநாதார் திருக்கல்யாணம்

திருமங்கலம், ஏப். 18: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமங்கலத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமை பெற்ற ஊர் திருமங்கலம். மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடக்கும் அதே தினத்தில் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடக்கும்.இதனடிப்படையில், ‘மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதர், மீனாட்சியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.  சிவாச்சாரியார்கள் மீனாட்சியம்மன், சொக்கநாதராக மாறி மாலை மாற்றி, திருமாங்கல்யம் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைக் காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டனர். தொடர்ந்து மீனாட்சியம்மன், சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர். கல்யாண விருந்து நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி நேற்று காலை முதல் நண்பகல் 2 மணிவரை உசிலம்பட்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Related Stories: