கோவை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாத்துரைக்கு ஆதரவாக டி.டி.வி.தினகரன் முகமூடி அணிந்து வாக்குசேகரிப்பு

கோவை, ஏப். 17: கோவை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாத்துரைக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் டி.டி.வி.தினகரனின் முகமூடி அணிந்து வாக்குசேகரித்தனர். கோவை  மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) வேட்பாளர்  அப்பாத்துரை கடந்த 1ம்தேதி முதல் கோவை தொகுதி முழுவதும் தீவிர  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து  வருகிறார். இவர், நேற்று கோவை மாநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு,  பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்குசேகரித்தார். இவருக்கு ஆதரவாக,  அமமுக கட்சி தொண்டர்கள், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரனின் முகமூடி அணிந்து காட்டூர் பகுதியில் வாக்குசேகரித்தனர். மாலையில், ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரத்தில் வேட்பாளர் அப்பாத்துரை தனது பிரசாரத்தை நிறைவுசெய்தார். பின்னர், வேட்பாளர் அப்பாத்துரை நிருபர்களிடம் கூறியதாவது:கோவை  தொகுதியில் இம்முறை அமமுக வெற்றிபெறும். இத்தொகுதியில், இதற்கு முன்  வெற்றிபெற்றவர்கள், கோவை மாநகரின் வளர்ச்சிக்கும், கோவை மக்கள்  மேம்பாட்டுக்கும் எதுவும் செய்யவில்லை. அந்த அதிருப்தி மக்களிடம் உள்ளது.  எனவே, இம்முறை மக்கள் மாற்றத்தை உருவாக்க முடிவுசெய்துவிட்டனர்.  அதன்அடிப்படையில் அமமுகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதை, நான்,  பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் உணர முடிந்தது.

 

தொழில் நகரமான  கோவையில் ஜி.எஸ்.டி வரியால் பல ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு விட்டன.  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டனர். நாங்கள்  வெற்றிபெற்றதும், ஜி.எஸ்.டி வரியில் பெரிய மாற்றம் கொண்டுவருவோம்.  மக்களையும், தொழில்முனைவோரையும் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம்  அடியோடு மாற்றி அமைக்கப்படும். கோவை மாநகரில் நிலவிவரும் குடிநீர்  தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டங்கள் கொண்டுவருவோம். மக்கள் மீது  சுமத்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு ஆகியவற்றை வாபஸ்  பெறுவோம். மக்கள் எதிர்பார்க்கும் அத்தனை திட்டங்களையும் கொண்டுவந்து  சேர்ப்போம். எனக்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான  வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அமமுக வேட்பாளர் அப்பாத்துரை கூறினார்.

Related Stories: