எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு விதிமுறைகளை மீறி பணி ஒதுக்கீடு அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு புகார்

திருச்சி, ஏப்.4: திருச்சியில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்ததன் மூலம் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்சி கல்வி மாவட்டத்தில் முகாம் எண் 44, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் எம்விஓ, டேப்லடர், சிஇ, எஸ்ஓ, ஏஇ ஆகிய பணிகள் ஒதுக்கீடு செய்வதில் எந்தவித முன்னேற்பாடுகள் இன்றியும், பணி மூப்பு பட்டியலை வெளியிடாமலும் குளறுபடிகளுடன் முகாம் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து பணி மூப்பு அடிப்படையில் விடைத்தாள் திருத்த பணிகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தும் கடந்த சில ஆண்டுகளாக சரியான முறையில் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் எடுத்துக்கூறி, அவ்வாறே நடத்திக் கொடுப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் உறுதியளித்தப் பின்னரும் பின்னர், குறிப்பிட்ட சங்கத்தை சார்ந்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது.

முகாம் அலுவலரின் சரியான திட்டமிடல் இல்லாமையால் அனுபவமற்ற ஆசிரியர்களை மெட்ரிக் பள்ளியிலிருந்து நியமித்தும், அனுபவம் வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்களை பணி ஒதுக்கீடு நிறைவுற்றதாக திருப்பி அனுப்பினர். கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களையும், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியில் மாணவரின் நலனை கருத்தில் கொள்ளாது ஈடுபடுத்தி உள்ளனர். தேர்தல் அவசரத்தை காரணம் காட்டியும், மாணவர் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமலும் பல குளறுபடிகளுடன் முகாமை நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை பின்பற்றாமல் முகாம் அலுவலர் தன்னிச்சையாக உள்நோக்கத்துடன் பணி ஒதுக்கீடுகள் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: