திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் முன் கொட்டப்படும் குப்பைகளால் நோய் அபாயம் பக்தர்கள் பீதி

திருச்சி, ஏப்.3:  திருவானைக்காவலில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் நிரம்பி வழிவதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பீதியடைந்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் குப்பையில்லா நகரம் என்ற சிறப்பை பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து வழங்கப்பட்டு, மேலும் குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகரில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளையும் மாநகராட்சி நிர்வாகம் படிப்படியாக குறைத்து வருகிறது. இவற்றையெல்லாம் திறம்பட செய்தாலும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பணியாளர்கள் சிலர் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதற்கு அந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதற்கு சான்றாக திருச்சி-திருவானைக்காவல் கோயில் பிரகார பகுதிகளில் கோயில் நுழைவுவாயில் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு, ஆடுகள் குப்பைகளை கிளறும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஆன்மிக பக்தர்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். அல்லது குப்பைகளை இதுபோன்று வீதியில் கொட்டுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டுமே செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதின் எதிரொலியாக கோயில் முன்பு தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு அவைகள் அகற்றப்படாமல் குப்பை குவியலாக மாற துவங்கியுள்ளது. இதனால் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஜம்புகேஸ்வரர் தலத்திற்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது மூக்கை பிடித்தபடி கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவலத்தில் உள்ளனர்.

 எனவே திருச்சியை தூய்மை நகரம் என கூறிவரும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை வீதிகளில் கொட்டுவதை அப்பறப்படுத்தவும், கொட்டுவதை தடுத்திடவும் மீண்டும் வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: