தேர்தல் விதி மீறல்களை சிவிஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்

புவனகிரி, ஏப். 3: புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சிதம்பரம் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். புவனகிரி தாசில்தார் சத்தியன், துணை தாசில்தார்கள் ஜான்சிராணி, ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுகவை சேர்ந்த ராமன், எழில்வேந்தன், ஜாகிர்உசேன், அதிமுக செல்வகுமார், பாஜக நாகராஜன் மற்றும் பல்வேறு கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர். இதில் உதவி தேர்தல் அலுவலர் வெற்றிவேல் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வேட்பாளர்களின் பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். கூட்டம் மற்றும் பிரசாரத்தின் செலவு கணக்குகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள செலவு கணக்கு அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் விதி மீறல்கள் குறித்து சிவிஜில் என்ற ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த தொகுதியை சார்ந்தவரோ அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான தபால் வாக்குகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது, தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வேட்பாளர்களின் முகவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: