அதிமுக வேட்பாளருக்கு சைகையில் வாக்கு சேகரித்த இபிஎஸ்: தேர்தல் அலுவலர்கள் திகைப்பு

திருவள்ளூர், மார்ச் 26: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரவு பத்து மணியை தாண்டிய பிறகும், மைக் இல்லாமல் திறந்த வேனில் சென்றபடி அதிமுக வேட்பாளருக்கு சைகையில் வாக்கு சேகரித்தார் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி. இதனால், செய்வதறியாது திகைத்தனர் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட போலீசார்.அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை கடந்த 22ம் தேதி சேலத்தில் துவக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்து வேன் மூலம் வேலூர், அரக்கோணம் தொகுதி கூட்டணி  வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு, இறுதியாக மீஞ்சூர் சென்றார்.அங்கு செல்வதற்குள் இரவு 10 மணி தாண்டி 10.10 ஆகிவிட்டது. இருப்பினும், அங்கு ஏராளமான தொண்டர்கள் காத்துக்கிடந்தனர். இதனால், திறந்த வேனில் நின்றபடி மைக் இல்லாமல் சைகையில், அதிமுக வேட்பாளருக்கு  வாக்கு சேகரித்தபடி வேனை நிறுத்தாமல் மெதுவாக சென்றார். இதனால் தேர்தல் அலுவலர்களும், மாவட்ட போலீசாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

Related Stories: