வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் வழங்கும் உணவுக்கு தடை

திருவள்ளூர், மார்ச் 22: தேர்தல் நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் ஸ்பான்சர் செய்யப்படும் உணவை சாப்பிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது . தமிழகம் முழுவதும், மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் பல ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் நாளில், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுவர். தேர்தலுக்கு முதல் நாளில், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு சென்று தங்குவர்.

அடுத்த நாள் மாலை வரை, பள்ளியில் தங்கியிருந்து வாக்குச்சாவடி பணிகளை கவனிப்பர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக உணவுப்படியை தேர்தல் கமிஷன் வழங்கி விடும். எனினும், முதல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று விடும் பெரும்பாலான அலுவலர்களுக்கு, அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் உணவு ‘’ஸ்பான்சர்’’ செய்து விடுவர். பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் கறி விருந்தும் ஏற்பாடு செய்வது உண்டு.

அடுத்த நாளில் காலை, மதிய உணவுகளைக் கூட கட்சியினரே ஏற்பாடு செய்து விடுவர். தேர்தல் கமிஷன் உணவுக்கு தனியாக பணம் கொடுக்கும் போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலோர் கட்சியினரின் ஸ்பான்சர் உணவுகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை கட்சியினர் ஸ்பான்சர் உணவை சாப்பிடக் கூடாது என தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’வாக்குச்சாவடி அலுவலர்கள், கட்சியினர் வழங்கும் உணவை சாப்பிடக் கூடாது. தேர்தல் கமிஷன் வழங்கும் பணத்தில் தான் உணவு வாங்கி சாப்பிட வேண்டும். அங்குள்ள வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்களிடம் பணம் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லலாம். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து விடுவர்’’ என்றார்.

Related Stories: