திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி பவர்கட்டால் தேர்வு எழுதும் மாணவர்கள் அவதி

திருவள்ளூர், மார்ச் 22: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் 14 முதல் நடைபெற்றுவரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக, திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில், பகல், இரவு என அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தில் மின்தடை இல்லாத சமயத்தில் வீடுகளில் இருப்பதே மிகவும் சிரமமாக உணரும்பட்சத்தில், பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களில் பாடு சொல்லத் தேவையில்லை. பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இம்மாணவர்களுக்கு பெரிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரவும், பகலும் கண் விழித்து தேர்வு எழுதிவரும் நிலையில் மாணவர்கள் மத்தியில், மின்தடை பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஏற்படும் கவனச்சிதறலால் மாணவர்களின் தேர்வுகள் பாதிக்குமோ என்று பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மாணவி ஒருவர் கூறுகையில், ‘’மின்தடை ஏற்படும் நேரத்தில் படிக்க முடியாமல் சிரமமாக உள்ளது. வீட்டிற்குள் உட்காரவே முடியவில்லை. எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும் என்றே தெரியவில்லை. என்னதான் படித்தாலும், தேர்வுக்கு முன் அனைத்தையும் திருப்பி பார்க்க வேண்டும். மின்தடையால் ஏற்படும் டென்ஷனால், படித்ததும் மறந்துவிடுமோ என்று தோன்றுகிறது’’’’ என்றார். பெற்றோர்கள் கூறுகையில், ‘’அதிக வெப்பத்தின் காரணமாக மின்தடை ஏற்படும் நேரத்தில் படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இரவில் சரியான உறக்கம் இல்லை என்றால் எப்படி படிக்க முடியும்? கோடைக்காலத்தின் போது, மின்பயன்பாடு அதிகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு தகுந்தபடி புதிய திட்டங்களை வகுத்து மின்உற்பத்தி செய்யாமல், காரணங்கள் சொல்வது வாடிக்கையாகி விட்டது’’ என்றனர்.   

Related Stories: