குந்தா, எமரால்டு அணைகளில் படகு சவாரி துவங்க கோரிக்கை

மஞ்சூர், மார்ச்.21: குந்தா மற்றும் எமரால்டு அணைகளில் படகு சவாரி துவங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள அப்பர்பவானி, கிண்ணக்கொரை, அன்னமலை, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, பென்ஸ்டாக் உள்ளிட்ட பகுதிகள் குந்தா பகுதியின் சிறந்த சுற்றுலா தலங்களாக உள்ளது. ஆனால் இப்பகுதிகளை சுற்றுலா பகுதியாக அறிவித்து சுற்றுலா மேம்பாட்டிற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அவலாஞ்சி பகுதியில் மட்டும் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குந்தா மற்றும் எமரால்டு அணைகளில் சிறுவர்களுக்கான படகு சவாரி துவக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பைக்காரா அணையில் உள்ளது போல் குந்தா, எமரால்டு அணைகளில் படகு சவாரி துவக்கும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Related Stories: