ஊட்டி நகராட்சி வாகனங்கள் டீசல் போட தடை நீக்கம்

ஊட்டி, மார்ச் 21:அமமுக., நிர்வாகி பங்கில் நகராட்சி குப்பை லாரிகள் டீசல் போட விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் மூன்று நாட்களுக்கு பின், ேநற்று முதல் குப்பை லாரிகள் இயங்கின.  ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் நகராட்சியில் உள்ள மினி லாரிகள் மற்றும் லாரிகள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களில் டீசல் நிரப்பி வந்தன. இந்த பங்க் முன்னாள் அதிமுக., பிரமுகர் மற்றும் முன்னாள் நகராட்சி துணை தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது. நகராட்சி நிர்வாகம் லாரிகளுக்கு நிரப்பப்படும் டீசல் பணம் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கி வந்துள்ளது. அந்த பங்க் உரிமையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர். இதனால், எவ்வித பிரச்னையும் எழவில்லை. . இந்நிலையில், சம்பந்தப்பட்ட பங்க் உரிமையாளர் கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக.,வில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி, ஊட்டி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பங்கில் நகராட்சி லாரிகள் மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் டீசல் நிரப்பக் கூடாது என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அந்த பங்கில் நகராட்சி வாகனங்கள் டீசல் நிரப்ப செல்லவில்லை. இதனால், போதிய டீசல் இன்றி நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் அள்ளுவதற்கு செல்ல முடியாமல் மினி லாரிகள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

   மேலும்,குப்பைகள் எடுத்து செல்ல லாரிகள் இல்லாத நிலையில் மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் மலைப் போல் குவிய துவங்கியது. இது தொடர்பான ெசய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது.. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நகராட்சி கமிஷனரிடம் விசாரணை நடத்தினார். தேர்தல் நேரங்களில் இது போன்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகள் உருவாகமால் பார்த்து ெகாள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனைதொடர்ந்து, நகராட்சி கமிஷனர் நாராயணன், அனைத்து வாகனங்களும் நேற்று முதல் மீண்டும் கோபாலகிருஷ்ணன் பங்கில் டீசல் நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் நகராட்சி வாகனங்கள் வழக்கம் போல் சம்பந்தப்பட்ட பங்கிற்கு சென்று டீசல் நிரப்ப தொடங்கின. அதன்பின், நகரில் உள்ள குப்பைகளை அள்ளும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: