தம்மம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான காளை சாவு

தம்மம்பட்டி, மார்ச் 21: தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாவின் போது அவிழ்த்துவிடப்பட்டு காணாமல் போன காளை பரிதாபமாக உயிரிழந்தது.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பனந்தோப்பு, தண்ணீர்தொட்டி பகுதியில், கடந்த 10ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதில், மதுரை, திருச்சி, அரியலூர், லால்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாணவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்த மூக்கன் என்பவரது காளை, வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட போது, சீறிப்பாய்ந்து வீரர்களிடம் பிடிபடாமல் ஓடியது.   இதையடுத்து காளையை பிடிக்க பின்தொடர்ந்து ஓடிச்சென்ற உரிமையாளர் மூக்கனிடம் காளை சிக்காமல் மாயமானது. இந்நிலையில் மாயமான காளையை, கடந்த 10நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தம்மம்பட்டி அருகே புலிகரட்டில், காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு, பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டதால், 10 நாட்களாக தண்ணீர், தீவனமின்றி சோர்வுற்று கிடப்பதாக, நேற்று மாலை தெரியவந்தது. தகவலறிந்து சென்ற காளையின் உரிமையாளர், அதற்கு முதலுதவி அளித்துள்ளார். எனினும், சிறிது நேரத்தில் அந்த காளை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: