தேர்தல் வருவதால் திருவிழாக்களுக்கு தாராள நன்கொடை அள்ளி தரும் ஆளுங்கட்சியினர்

சிவகங்கை, மார்ச் 19:  மக்களவை தேர்தலால் கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராள நன்கொடை அளித்து வருகின்றனர். ஏப்.18ல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியானதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் கட்சியினர் ஓர் இடத்தில் கூட்டம் நடத்துவது, சாப்பாடு உள்ளிட்ட செலவுகள் செய்தாலும் அனைத்தும் தேர்தல் கணக்கில் வரும். இந்நிலையில் கட்சியினரை கவர்வதை விட பொதுமக்களை கவர்வதில் போட்டா போட்டி நிலவுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் அனைத்து ஊர்களில் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களுக்கு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். தெருக்களில் உள்ள சிறிய அம்மன் கோவில்களுக்கும் பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்தப்படும். தீச்சட்டி ஏந்துதல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துவது, பால் குடம் எடுத்தல் என பக்தர்களின் வேண்டுதல் நிகழ்ச்சிகளோடு, கலை நிகழ்ச்சிகளும் களைகட்டும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளவர்கள் மட்டும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு விழா எடுப்பர். இதற்காக அப்பகுதியில் உள்ளவர்களிடம் நன்கொடை வசூல் செய்து விழா நடத்துவர். இவர்கள் அடுத்த பகுதியில் வேறு அம்மன் கோவில் இருப்பதால் அங்கு உள்ளவர்களிடம் வசூல் செய்வதில்லை. இந்நிலையில் தேர்தல் வர இருப்பதையொட்டி இது போன்ற கோவில் விழாக்களுக்கு அரசியல் கட்சியினர் தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். சில நூறுகளில் இத்தனை ஆண்டுகள் நன்கொடை வழங்கி வந்தவர்கள் தற்ேபாது ஆயிரக்கணக்கில் கொடுக்கின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சி அல்லது உணவு வழங்குதல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை தாங்களே செலவு செய்து நடத்துவதாக பொறுப்பேற்று கொள்கின்றனர்.

இதில் ஆளும் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர். விழா நடத்துபவர்களே மறந்துவிட்டாலும் வலியப்போய் நன்கொடை வழங்குவதும் நடக்கிறது. கோவில் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், தேர்தல் வர இருப்பதால் அப்பகுதி மக்களின் வாக்குகளை கவர இதுபோல் செய்கின்றனர். ஏற்கனவே அறிமுகமான கட்சியினர் அப்பகுதியில் விழா நடக்கும் அன்று முழுவதுமாக தாங்களே பொறுப்பேற்று விழா நடத்துவது போல் காட்டிக்கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில் நன்கொடையாக எழுதிய பணத்தை வாங்கவே பல மாதம் அலைய வேண்டும். தற்போது அவர்களாகவே கூப்பிட்டு தருகின்றனர். அனைத்து கட்சிகளும் இதுபோல் செய்தாலும் ஆளும் கட்சியினரே இதுபோல் அதிக பணம் செலவு செய்கின்றனர்’’ என்றார்.

Related Stories: