8சதவீத கூலி உயர்வை ஏற்க மறுப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

பள்ளிபாளையம், மார்ச் 8: பள்ளிபாளையத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், 8 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த விசைத்தறி தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கி உள்ளனர். நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் கூலி உயர்வு வழங்கக்கோரி சிஐடியூ தொழிற்சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது. தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், முதலில் 6 சதவீத கூலி உயர்வை அறிவித்தனர். கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் எனவும்,  வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பும்படியும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளுடன், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  நேற்று முன்தினம், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் சிஐடியூ, ஏஐசிசிடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 8 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுவே இறுதி முடிவாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இதையடுத்து புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, ஏஐசிசிடியூ தொழிற்சங்க அலுவலகம் உள்ள ஆவத்திபாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள், மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். தொழிற்சங்க அலுவலகத்தில், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுப்ரமணி, தண்டபானி, கதிரவன் உள்ளிட்டோர் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து ஆலோசித்தனர்.  அப்போது, விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னையில், அரசு தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த திடீர் வேலை நிறுத்தத்தால், அப்பகுதியில் உள்ள சுமார் 100 தறிப்பட்டறைகள் வெறிச்சோடியது.

Related Stories: