கம்பம் அருகே குப்பைத்தொட்டியாகும் கேசவபுரம் கண்மாய் பேரூராட்சி மீது மக்கள் புகார்

கம்பம், மார்ச் 7: கம்பம் அருகே உள்ளே கேசவபுரம் கண்மாயில் ஊராட்சி, பேரூராட்சி குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதி மாசுபடுகிறது. எனவே கண்மாயில் குப்பைக்கழிவு கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிக்கும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கும் இடையே கேசவபுரம் கண்மாய் உள்ளது. மழை காலங்களில் மேகமலை வனப்பகுதியில் வரும் தண்ணீர் யானைகெஜம் ஓடை வழியாக கேசவபுரம் கண்மாயை வந்தடைகிறது. 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தண்ணீரினால் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.

கண்மாயில் தற்போது நீர் வறண்டு காணப்படுகின்றது. இந்நிலையில் நாராயணத்தேவன் பட்டி மற்றும் காமயகவுண்டன் பட்டி கிராமப்பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சுகாதார பணியாளர்கள் டிராக்டரில் சேகரித்து குளத்தில் கொட்டி வருகின்றனர். சிலர் இறைச்சி கழிவுகளையும் இக்குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் கண்மாய் அருகிலுள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் பாதித்துள்ளது. எனவே, கண்மாயில் குப்பை கொட்டும் சுகாதாரப் பணியாளர்கள் மீது மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: