பிரதமர் கூட்டத்தால் தாம்பரம்-செங்கல்பட்டு சாலையில் நெரிசல் நத்தை வேகத்தில் நகர்ந்த வாகனங்கள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி

தாம்பரம்: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அரசின் நலத்திட்ட தொடக்க விழா மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்து, ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். இதில், பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் குவிந்தனர்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான இரு மார்க்கத்திலும் ஜிஎஸ்டி சாலையில் சுமார்  3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தையை போல ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும், அரசு பேருந்துகளில் விளம்பர நோட்டீஸ்கள் ஓட்டினால் ரூ5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எழுத்தப்பட்டு இருக்கும். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட அரசு பஸ்கள் அனைத்திலும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

இதை கண்ட நடுநிலையாளர்கள், பொதுமக்கள் ஆளும் கட்சியினருக்கு ஒரு  நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்த இவர்கள், அரசியல்வாதிகளின் நோட்டீஸ்களை கண்டு கடுப்பாகினர்.

Related Stories: