வாலாஜா நகரில் என்எஸ்எஸ் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர்,பிப்,28: அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக வாலாஜா நகர் கிராமத்தில் நடந்து வரும் சிறப்பு முகாமின் ஆறாவது நாளான கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை காலை 8.30 மணிக்கு அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர்  முகமது ஆசிப் மற்றும் துணை இயக்குநர் முருகன் ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர். இம்முகாமில் காட்டுப்பிரிங்கியம் கால்நடை உதவி மருத்துவர்  செல்வி, விளாங்குடி கால்நடை உதவி மருத்துவர் ரங்கசாமி,  ஆகியோர் கலந்துகொண்டு ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

கால்நடைகளுக்கு குடற்புழுக்கள் நீக்குவதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டது. கிராம மக்கள் தங்களது கால்நடைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து மருந்துகள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.  மதியம் 12 மணிக்கு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை அரியலூர் தேர்தல் துணை தாசில்தார் இளவரசு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

தொண்டர்கள் கிராம தெருக்களில் பேராணியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவு இடைவேளைக்குப்பிறகு தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக “முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி பயன்படுத்திடவும், திறந்தவெளியில் மலம் கழிப்பதனால் உண்டாகும் தீமைகள் பற்றியும், இளைஞர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரிடம் அதனால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களைப்பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் வலியுறுத்தினார். சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலை பெற்று, தன்னிறைவு பெற நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் அரியலூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும்  அலுவலர்கள் கலந்துகொண்டு பேசினர்.  நிகழ்ச்சிகளில் பொது மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர்கள் கருணாகரன் மற்றும்  செல்வமணி ஆகியோர்  ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

Related Stories: