நீர்நிலை புனரமைப்புக்காக மதுரை கலெக்டருக்கு மத்திய அரசு விருது

மதுரை, பிப்.26: மதுரை மாவட்டத்தில் நீர்நிலை புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதலுக்காக மத்திய தேசிய நீர் விருது கலெக்டர் நடராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குவதற்காக மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு தென்மாநிலங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு பணி மற்றும் புதிதாக உருவாக்கியதற்காக தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிக்காக மாவட்டத்திற்கு 3ம் பரிசும் கிடைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் புதுடெல்லியில் நேற்று நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜனுக்கு முதல் பரிசுக்கான விருது மற்றும் சான்றிதழை வழங்கி, பாராட்டு ெதரிவித்தார்.

கலெக்டர் நடராஜன் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப்பால், நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பணி சிறப்பாக செய்ய முடிந்தது. இதனால்தான் பருவமழை காலத்தில் பெய்த மழை நீரையும், வைகையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரையும் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தேக்கி வைக்க முடிந்து. இதன்மூலம் நிலத்தடிநீர் மட்டும் செறிவூட்டல் பணியும் நடைபெற்றது. இந்த பணிக்காக மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: