திருத்தணி அரசு மருத்துவமனையில் இடிந்து விழும் ஆபத்தில் பிரசவ வார்டு

திருத்தணி, பிப். 21: திருத்தணி வட்டார அரசு மருத்துவமனையில்உள்ள பிரசவ வார்டு கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து மழைநீர் ஒழுகிறது. இடிந்து விழும் ஆபத்தில் உள்ள மேற்கூரை சிமென்ட் பூச்சை பெயர்த்து எடுத்துவிட்டு பழுது பார்க்க வேண்டும் என கர்ப்பிணிகளும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் அரசு வட்டார மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக  உள்ளன.

இம்மருத்துவமனையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் புறநோயாளிகளாவும், உள் நோயாளிகளாவும் சிகிச்சை பெறுகின்றனர்.  இந்த மருத்துவமனையில், கடந்த 2011-12ம் ஆண்டு என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பிரசவ வார்டு கட்டப்பட்டது. அதில், மொத்தம் 8 அறைகள் உள்ளன. இந்த வார்டு, கட்டி  முடித்து, ஆறு ஆண்டுகளே ஆகின்றன. இந்நிலையில், பிரசவ வார்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை தாங்கி நிற்கும், பில்லர்கள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. அதனால், கட்டிடத்தின் உறுதி தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.

 லேசான மழை பெய்தாலே, மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுகிறது. மேலும், மேற்கூரை தளம்  இடிந்து விழுமோ என்ற ஒருவித அச்சத்துடனே  கர்ப்பிணிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இது குறித்து பலமுறை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும், இடிந்து விழும் ஆபத்தில் உள்ள வட்டார மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும், நோயாளிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: