மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி 78வது ஆண்டு பவளவிழா

நெல்லை, பிப். 20: மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் 78வது ஆண்டு விழா மற்றும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் எல்கேஎஸ் முகம்மது மீரான் தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல் மஜீத் வரவேற்றார். புதிய கட்டிடத்தை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சுயஉதவி பாடத்திட்டதில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைத்தார்கள். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். சம்பளம் இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும். ஐசிடி திட்டத்தின் கீழ் 9,10,11ம் வகுப்புகள் முற்றிலும் கணிணிமயமாக்கப்படும்.

மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி விரைவில் கல்லூரியாகி எதிர்காலத்தில் பல்க்கலைகழகமாக மாறும். தரமான கல்வி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதற்காக தொலைநோக்கு திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. இயற்கை வளங்களை காக்க வேண்டும் என்பதற்காக வரும் ஆண்டில் 3.5 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் எம்பிக்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எல்எல்ஏக்கள் முருகையாபாண்டியன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முதன்மை கல்வி அதிகாரி பாலா, மாவட்ட கல்வி அதிகாரி ரேணுகா, முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், துணைத்தலைவர் முகமது அலி அக்பர், அன்னை காஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் செய்யது அகமது, அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, மாநில அமைப்புச்செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப் ஜான், மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹயாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் முகம்மது, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெசிந்தா, நெல்லை கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் ஹரிகரசிவசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். கல்வி கமிட்டி உறுப்பினர் முகம்மது இலியாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் நிஜாமுதின் நன்றி கூறினார்.

Related Stories: