திருச்சியில் இரவில் பயங்கரம் குடிபோதையில் செல்போனை பறித்த 2 பேர் கத்தியால் குத்திக் கொலை ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்

திருச்சி, பிப்.20:  திருச்சியில் டாஸ்மாக் கடை முன் குடிபோதையில் செல்போனை பறித்த 2 பேரை ஆட்டோ டிரைவர் ஆத்திரத்தில் கத்தி குத்திக்கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரகாஷ் (34), பெயிண்டர். இவரது நண்பர் இபி ரோடு கருவாடு பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜ்(30). இருவரும் நேற்று இரவு ஓயாமரி சுடுகாடு முன்னே உள்ள தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது குடித்தனர்.

தொடர்ந்து மது போதையில் வந்த இருவரும் எதிரே பூட்டியிருந்த மெக்கானிக் கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய டிரைவர் ஆண்டார் வீதியை சேர்ந்த ராஜன் மகன் ஜெகநாதன்(32) என்பவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு டாஸ்மாக் நோக்கி சென்றார். அப்போது போதையில் இருந்த இருவரும் ஜெகநாதனை அழைத்தனர். இருவரிடமும் வந்து என்ன என கேட்ட ஜெகநாதனை தகாத வார்த்தையால் திட்டினர்.

மேலும், அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து அடித்து விரட்டினர். இதில் ஆத்திரமடைந்த ஜெகநாதன் அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த ஜெகநாதன், மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் மாறி மாறி குத்தினார். இதில் இருவரும் அலறியபடியே இருவரும் சரிந்து விழுந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் அங்கிருந்து நழுவிய ஜெகநாதன் நேராக கோட்டை போலீசில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இருவரும் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.

 இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஜெகநாதன் கத்தியை டாஸ்மாக் பாரில் இருந்து எடுத்து வந்து குத்தினாரா அல்லது எதிரே இருந்த டிபன் கடையில் இருந்து எடுத்து வந்து குத்தினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொல்லப்பட்ட இருவருக்கும் ஜெகநாதனுக்கிடையே முன்விரோதம் இருந்ததா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. செல்போனை பறித்ததற்காக இருவர் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகுதி மக்கள் பீதி

தேவதானம் பகுதியில் மெயின் ரோட்டில் குடியிருப்புகள் மற்றும் பட்டறைகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கடை அகற்றப்படும் என கூறியும் அகற்றப்படவில்லை. தற்போது இரட்டை கொலை நடந்ததையடுத்து அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: