அரிமளம் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் காயம்

அரிமளம்,பிப்.20: அரிமளம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடை பெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுமுட்டியதில் 2பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வாளரமாணிக்கம் பெரிய நாயகி அம்பாள், கைலாசநாதர்கோயில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு போசம்பட்டி கிராமத்தார்களால் வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது.  புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் 11மாடுகள் கலந்து கொண்டன. வடமாடு மஞ்சுவிரட்டுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த திடலில் ஒவ்வொரு மாடாக நீண்ட கயிற்றில் கட்டி களம் இறக்கினர். இந்தமாட்டை அடக்க 9பேர் கொண்ட மாடுபிடி வீரர்குழு களத்தில் இறக்கி விடப்பட்டனர். ஒவ்வொரு மாட்டை அடக்க குழுவுக்கு தலா 25நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடுபிடிவீரர்கள் மாட்டை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5001 ரொக்கம், மொபைல் போன் உள்ளிட்ட சிறப்புபரிசுகள் வழங்கப்பட்டது.

அதேபோல் மாடு வீரர்கள் கையில் சிக்கவில்லை என்றால் மாடு வெற்றி பெற்ற தாக அறிவித்து மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 மாடுகளில் 5மாடுகளை வீரர்கள் அடக்கி பரிசு பெற்றனர். இதில் மாடு முட்டியதில் 2பேர் லேசான காயமடைந்தனர். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந் திரளானோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை போசம்பட்டி இளை ஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: