நாளை முதல் வைகை அதிவிரைவு ரயில் மணப்பாறையில் நின்று செல்லும் ரயில்வேதுறை அறிவிப்பு

மணப்பாறை, பிப்.15: நாளைமுதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறையில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.  திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மணப்பாறையை சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீனாட்சி நூற்பாலை, மாரீஸ் நூற்பாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இரண்டாம் அலகு தொழிற்சாலையும் மணப்பாறை அருகில் உள்ள மொண்டிப்பட்டியில் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertising
Advertising

திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கி.மீக்கு இடையில் மணப்பாறை ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன. ஆனால் அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணப்பாறையில் நிற்பதில்லை. இந்நிலையில் மணப்பாறையில் வைகை அதி விரைவு ரயில் நிற்க வலியுறுத்தி பல்வேறு  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து, ஆறு மாத சோதனை ஓட்டமாக மணப்பாறையில் வருகிற 16ம் தேதி முதல் காலை 8.45 மணிக்கு வைகை அதிவிரைவு ரயில் மணப்பாறையில் நின்று செல்லும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல திருப்பதி, அந்த்யோதயா ரயில்களும் நின்று செல்ல பொது மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: