கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை சாலையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.14: கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காததைக் கண்டித்து கறந்த பாலினை சாலையில் ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவைமாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பால் கொள்முதல் விலையை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தி வழங்காததை கண்டித்தும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹35 வழங்கிடக் வேண்டும், விற்பனை விலையை உயர்த்தாமல் இருக்க கர்நாடகாவைப் போல தமிழக அரசும் ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயை ஊக்கத்தொகை வழங்க வேண்டும், மாட்டுத் தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும், பால்பணம் பாக்கி, போனஸ், ஊக்கத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாலைக் கொள்முதல் செய்யும் இடத்திலேயே, சத்துக்கள், அளவு ஆகியவற்றைக் குறித்து வழங்க வேண்டும், பால் விற்பனையை அதிகப்படுத்த, சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்கக் வேண்டும் என தமிழகம் முழுவும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் 12ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் பாலினை சாலையில் ஊற்றி, கறவைமாடுகளோடு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூரில் நேற்று மாலை பால் சொசைட்டி மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனுக்கூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செங்கமலை வகித்தார். செயலாளர் அழகேசன் வரவேற்றார். அனுக்கூர் பால் உற்பத்தியாளர்கள் ரவி, தங்கராசு, கோவிந்தன், ராமர் குருசாமி, சடையப்பன், பெரியசாமி, ராஜேந்திரன், முருகேசன், கணேசன், ஏகாம்பரம், பிச்சைப்பிள்ளை, சின்னதுரை, தேவேந்திரன், ஜெகதீஸ், ராமர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலச்செயலாளர் செல்லதுரை, கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் வரதராஜ், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டப்பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனுக்கூர், அ.குடிகாடு பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் தங்களது கறவை மாடுகளுடன் கலந்து கொண்டு, கறந்த பசும்பாலினை கேன்களில் கொண்டு வந்து, அவற்றை சாலையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: