கோடை காலம் தொடங்கும் முன்பே தீபமலையில் தீ விபத்து ஏராளமான மரங்கள் பற்றி எரிந்தன திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் பற்றி எரிந்தன. கிடுகிடுவென பரவிய தீயை, தன்னார்வ இளைஞர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் அண்ணாமலையை, இறைவனின் திருவடிவமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். தீபமலையில் அரியவகையான மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளன. எனவே, மலையின் பசுமையை பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனாலும், அனுமதியின்றி மலைக்கு செல்லும் நபர்களால் ஏற்படுத்தப்படும் தீவிபத்துகளில் ஏராளமான மரங்கள் கருகி அழிவது ஒவ்வொரு கோடை காலத்திலும் நடக்கிறது.இந்நிலையில், தீபமலையில் உள்ள முலைப்பால் தீர்த்தம் மற்றும் கந்தாஸ்ரமம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி மரங்கள், செடிகள், மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால், தீப்பிழம்பும், கரும்புகையும் பல அடி உயரத்துக்கு காணப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும், வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு குழுவினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மலைக்கு விரைந்தனர். மரக்கிளைகளை உடைத்து தீயின்மீது வீசி படிப்படியாக தீயை கட்டுப்படுத்தினர்.சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பிறகு, மாலை 6 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மரங்கள், மஞ்சம் புற்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தடையை மீறி மலைப்பகுதிக்கு செல்லும் நபர்களால், இது போன்ற தீவிபத்துகள் ஏற்படுவதாகவும், தடையை மீறி மலைமீதும்், வனப்பகுதியிலும் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறையினர் என எச்சரித்தனர்.

Related Stories: