உடல்நிலை பாதித்த முருகனுக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றம் மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பு வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம்

வேலூர், பிப். 14: வேலூர் சிறைகளில் தொடர் உண்ணாவிரதத்தால் உடல் சோர்வடைந்த முருகனுக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. நளினிக்கு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அவரது மனைவி நளினியும் கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ேமலும் ‘விடுதலை தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தை விட்டு செல்கிறோம்’ என்று கவர்னருக்கு உருக்கமான கடிதமும் அனுப்பி வைத்தார்.

உண்ணாவிரதத்தை கை விடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொடர் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு நேற்று உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறை மருத்துவமனையில், சிறை மருத்துவர்கள் மூலம் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றினர்.தொடர்ந்து முருகனின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியும் உடல் சோர்வாக காணப்படுகிறார். அவருக்கு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: