உடுமலை, பிப். 13: உடுமலை நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் செயல்படுவதில்லை.
உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும், திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது 24 மணி நேர குடிநீர் திட்டம் அமலில் உள்ளதால், நகரில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கிறது. முன்பு குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. தற்போது, குடிநீர் தட்டுப்பாடு இல்லாததால் இந்த ஆழ்குழாய் கிணறுகள் செயல்படுவதில்லை. பராமரிப்பின்றி, ஆழ்குழாய் கிணறுகள் உள்ள பகுதி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வீணாகும் நிலையில் உள்ளது.